shawshank redemption காந்தியம்
விருதுகளுக்காக அறிவிக்கப் பட்டுள்ள படங்களில் பல சமயங்களில் நமக்கு தெரிந்து விடும் இந்தப் படத்திற்கு தான் விருது கிடைக்கப் போகிறது என்று. ஆனால் சில சமயங்களில் ஒரே சமயத்தில் இரண்டு மிகச் சிறப்பான படங்களில் வெளியாகி எந்தப் படத்திற்கு விருது கிடைத்தாலும் சரியே என்ற நிலை தோன்றுவதுண்டு.
1994 வருட ஆஸ்காரில் அது போன்றே ஒரு சூழ்நிலை நிலவியது. Forrest gump மற்றும் Shawshank redemption என்ற இரண்டு படத்தில் எதற்கு விருது கிடைத்தாலும் கரெக்ட் தான் என்ற சூழ்நிலை நிலவியது. கடைசியில் Forrst gump படத்திற்கு விருது கிடைத்தாலும் அந்த விருது எந்தப் படத்திற்கு வேண்டுமானாலும் கிடைத்திருக்கலாம்.
ஆண்டி ஒரு வங்கி வைஸ் பிரசிடெண்ட் தன்னுடைய மனைவியையும், அவளுடைய கள்ளக் காதலரையும் கொலை செய்ததாக Shawshank ஜெயிலுக்கு அனுப்பப் படுகிறார்.
அந்த ஜெயிலில் எல்லோருக்கும் சிகரெட் போன்றவற்றை எல்லோருக்கும் வெளியில் இருந்து வாங்கிக் கொடுப்பவர் தான் ரெட்.
படத்தில் ஒரு சிறப்பான காட்சி ஆண்டி முதல் நாள் ஜெயிலில் இரவைக் கழிக்கும் காட்சி. முதல் நாள் ஜெயிலுக்கு வரும் அனைவரும் ஆளுக்கு ஒருத்தர் மேல் பந்தயம் கட்டுகிறார்கள். ரெட் ஆண்டி மேல் பந்தயம் கட்டுகிறான். எதற்கு பந்தயம் என்பது அன்று இரவு தெரிய வருகிறது. ஜெயிலுக்கு முதல் முறை வருபவர் அனைவரும் முதல் நாள் இரவில் அழுதே ஆக வேண்டும். யார் முதலில் அழுவார்கள் என்பது தான் பந்தயம்.
இந்தக் காட்சி மிக நன்றாக படமாக்கப்பட்டிருக்கிறது. ஜெயிலுக்கு முதல் முறை வந்தவகள் அழுவது ஜெயில் என்பது எவ்வளவு கொடுமையானது என்பதைக் காட்டும் காட்சியாக அமைகிறது.
ஆண்டி மீது பந்தயம் கட்டும் ரெட் தோற்கிறான். ஏனெனில் அவன் கடைசி வரை அழுகாமல் இருக்கிறான்.
ஆரம்பத்தில் அமைதியாகவும் தனித்தும் இருக்கும் ஆண்டியை மற்றவர்களுக்குப் பிடிக்காமல் போய் விடுகிறது.
ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அனைவரிடமும் பழக ஆரம்பிக்கிறான் ஆண்டி.
அதே சமயத்தில் ஜெயிலில் நடக்கும் வழுக்கட்டாயமான ஓரினச் சேர்க்கை வன்முறைக்கு ஆளாகுகிறான் ஆண்டி. அவர்களைத் தாக்கி அதில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் ஆண்டியின் முயற்சிகள் வீணாகுகின்றன.
இப்படியே இரண்டு வருடங்கள் கழிகின்றது. இதற்குள் ரெட்டிடம் நெருக்கமாகி விடுகிறான் ஆண்டி. அப்பொழுது ரெட்டின் மூலமாக சிறைக்கு வெளியில் சென்று வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. அங்கு ஜெயில் வார்டன் தனக்கு 35,000 டாலர் ஒரு உறவினரின் உயிலில் இருந்து கிடைத்திருப்பதாகவும் அதற்கு வருமான வரி கட்டுவதன் மூலம் நிறைய இழக்க நேரிடும் என்றும் வருத்தப்படுகிறார்.
அப்பொழுது ஆண்டி தனக்கு தெரிந்த விவரங்களின் மூலம் வருமான வரி விலக்கு இருப்பதை சுட்டிக் காட்டுகிறான். அதுதான் அவனுடைய ஜெயில் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைகிறது.
இந்த யோசனைக்கு பிரதி பலனாக வெளியே வேலை செய்யும் எல்லோருக்கும் பியர் வரவழைத்து கொடுக்கிறான் ஆண்டி. சிறையில் பல காலம் வாடிக் கிடக்கும் ரெட் போன்றவர்களுக்கு அந்த சாதாரண பியரே எதோ சொர்க்கமே கிடைத்தது போன்று உணர்கிறார்கள்.
வார்டன் மேலும் ஓரினச் சேர்க்கையாளர்களிடம் இருந்தும் ஆண்டியைக் காப்பாற்றுகிறார்.
கொஞ்சம் கொஞ்சமாக சிறை அதிகாரிகள் அனைவருக்கும் வருமான வரி விலக்கு குறித்த யோசனைகளில் இருந்து எல்லா விதமான finanace யோசனைகளும் வழங்குகிறான் ஆண்டி. இதற்கு பிரதி பலனாக ஜெயிலில் இருக்கும் லைப்ரரியை விரிவாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறான் ஆண்டி.
ஆண்டிக்கு இதனால் சில பிரதிபலன்கள் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு கற்களை செதுக்கும் ஒரு சுத்தியல் போன்ற ஒரு கருவி ஆண்டியிடம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டும் கண்டு கொள்ளாமல் விட்டு விடப் படுகிறது.
இதற்கு நடுவில் ஜெயில் வாழ்க்கை எப்படி ஒரு மனிதனுக்கு பழகி விடுகிறது எப்படி பல காலம் ஜெயிலில் இருந்து வெளியாகும் ஒருவர் வெளியுலக வாழ்க்கையோடு ஒத்து வர முடியாமல் தூக்கி மாட்டிக் கொண்டு இறக்கிறார் என்று பல நெகிழ வைக்கும் காட்சிகள்.
ஆண்டி ஜெயிலுக்கு வந்து 19 வருடங்கள் ஆகி விடுகின்றது. இந்த சமயத்தில் ஜெயிலில் இருக்கும் சக கைதிகளை எல்லாம் ஒன்று திரட்டி பல வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துகிறான். தலைமை வார்டன் ஆண்டியின் திறமைகளைக் கண்டு கைதிகள் சீர்திருத்தம் என்ற பெயரில் கைதிகளை ரோடு போடுவது போன்ற பகுதிகளில் ஈடுபடுத்துகிறார்.
ஆரம்பத்தில் ஒழுங்காக செல்லும் இந்தப் பணிகளில் லஞ்சம் போன்றவை தலை தூக்க ஆரம்பிக்கின்றன. தலைமை வார்டனுக்கு இதன் மூலம் பல மில்லியன் டாலர் லஞ்சம் கிடைக்கிறது. ஆண்டி வார்டனுக்கு வரும் லஞ்சங்களை திறமையாக வெள்ளைப் பணமாக மாற்ற யோசனைகளை சொல்கிறான்.
இந்த சமயத்தில் தான் ஆண்டி உண்மையிலேயே குற்றவாளி கிடையாது என்ற உண்மை தெரிய வருகிறது. ஜெயிலுக்குப் புதிதாக வரும் கைதி ஒருவன் ஆண்டி குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்கும் ஆதாரத்துடன் வருகிறான்.
ஆண்டி தலைமை வார்டனிடம் சொல்லி தன்னுடைய வழக்கை திரும்ப ஆரம்பிக்குமாறு கூறுகிறான். தலைமை வார்டன் ஆண்டி விடுதலையானால் தன்னுடைய லஞ்ச லாவண்யங்கள் வெளியே தெரிந்து விடும் என்பதை உணர்ந்து ஆதாரங்களை வைத்திருக்கும் கைதியைக் கொன்று விடுகிறார்.
அதன் பிறகு என்னவாகிறது என்பது திருப்புமுனையான ஒரு கிளைமாக்ஸ்.
படத்தில் குறிப்பிட்டு சொல்லப் பட வேண்டியது ஜெயில் வாழ்க்கையை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருப்பது. மார்கன் பீரிமேன்(ரெட்), டிம் ராபின்ஸ்(ஆண்டி) ஆகியோரின் நடிப்பு.
இதில் நவீன அல்லது என் அளவிலான காந்தியத்தின் பிரதிநிதியாக அமைந்திருக்கிறது ஆண்டியின் பாத்திரம்.
ஓரினச் சேர்க்கையாளர்கள் அவனை துன்புறுத்தும் சமயம் ஆண்டி அஹிம்சை என்பதை கையாளவெல்லாம் இல்லை. அடித்து உதைத்தே அதில் இருந்து வெளியாக முயற்சிக்கிறான். அஹிம்சை என்பது எல்லா இடங்களிலும் உதவாது என்பது இன்றைய நிதர்சன உண்மை. அது போல தலைமை வார்டனுக்கு உதவுவது என்பதெல்லாம் மனிதன் என்பவன் சூழ்நிலைக் கைதி தான் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்தே இருக்கிறது.
ஆண்டி சொல்வதாக "I was a decent man outside the jail. I came inside the jail to become a crook" அமைந்திருக்கும்.
மனிதன் என்பவனால் எப்பொழுதுமே அன்பு அஹிம்சை என்றிருக்க முடியாது எனபதை தெளிவாக விளக்கும் காட்சி இது.
ஆனால் இது போன்ற செயல்களால் அனைவருக்கும் உதவி செய்து சிறைக் கைதிகளிடம் நம்பிக்கையை உண்டாக்குவது போன்ற செயல்களால் ஆண்டி காந்தியவாதியாகிறான்.
தன்னால் இயன்ற அளவு மற்றவர்களுக்கு உதவி செய்து, கை மீறி செல்லாத வரை அன்பையும் அகிம்சையையும் பின்பற்றுவதும் காந்தியம் தானே.