Thursday, September 28, 2006

வாழ்க்கை

உனக்கு இல்லாத ஒன்று உனக்கு வேண்டுமென்றால் நீ இது வரை செய்யாத ஒன்றை செய்ய வேண்டும்.

Free Image Hosting at www.ImageShack.us

வாழ்க்கை செல்லும் வழிகளில் எல்லாம் செல்லாதே. நீ செல்லும் வழியில் வாழ்க்கையை அழைத்துச் செல்.

நீ வாழ்வதற்காக பிறந்தவன். பிறந்ததற்காக வாழாதே.

Monday, September 25, 2006

மனமே ஓ மனமே

ஒரு பணக்காரர் தன் மகனுக்கு பணத்தின் அருமை குறித்து புரிய வைக்க அவனை ஏழைகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்று அனைத்தையும் கண்ட பிறகு தந்தை மகனிடம் கேட்கிறார்.

"நான் சென்று வந்த இடங்களைப் பற்றி என்ன நினைக்கிறாய்? இதில் இருந்து நீ என்ன கற்றுக் கொண்டாய்?".

மகன் பதிலளிக்கிறான்

"நான் என்ன கற்றேன் என்றால் நம்மிடம் ஒரு நாய் இருக்கிறது. அவர்களிடம் நான்கு நாய்கள் இருக்கிறது."

"நம் தோட்டத்தின் நடுவில் ஒரு சின்ன நீச்சல் குளம் இருக்கிறது. அவர்களிடத்தில் ஒரு மிகப் பெரிய ஏரி இருக்கிறது."

"நம்மிடம் விதவிதமான விளக்குகள் இருக்கிறது. அவர்களிடத்தில் நட்சத்திரங்கள் இருக்கின்றன."

"நம்மிடத்தில் நண்பர்களுடன் பேச, பழக ஒரு சிறிய இடம் இருக்கிறது அவர்களிடத்திலோ எல்லையில்லாத ஒரு இடம் இருக்கிறது."

"நம்மிடம் நம்மைப் பாதுகாக்க பெரிய சுவர்கள் இருக்கின்றன. அவர்களிடத்தில் நண்பர்கள் இருக்கிறார்கள்."

இந்த பதிலைக் கேட்ட அந்த சிறுவனின் தந்தை திகைத்து நின்றார்.

இந்தச் சிறுவன் வறுமையிலும் அவர்களிடத்தில் இருக்கும் நிறைகளையும் பார்த்திருக்கிறான்.

நம்மில் பலர் இன்று பல நிறைகள் இருக்கும் இடத்திலும் குறைகளை மட்டுமே பார்க்கிறோம்.

pessimist ஆக பல நல்ல விஷயங்களை ஒதுக்கியே வருகிறோம்.

நமது பார்வையை மாற்றிக் கொள்ள இன்னும் நேரம் இருக்கிறது.

இந்தப் பதிவையும் கூட நீங்கள் வாழ்க்கைக்கு உதவாது என்று ஒதுக்கிப் போகலாம் இல்லையென்றால் இது பற்றியும் கொஞ்சம் சிந்திக்கலாம்.

அது உங்களிமன் பார்வையை குறித்ததே.

Monday, September 18, 2006

விலங்குகளின் பாடம் மனிதனுக்கு

Image Hosted by ImageShack.us

ஆறாம் அறிவு இல்லாதது நாய். நாய் அறிந்தது எல்லாம் survival instinct மட்டுமே. ஆனால் இங்கு அதனுடைய survivalக்கு ஆபத்து விளைவிக்க கூடிய விலங்கிடம் கூட அன்பு செலுத்துகிறது.

மாற்று இனத்திடம் கூட அன்பு செலுத்தும் இந்த நாயிடம் இருந்து ஆறாம் அறிவு கொண்ட மனிதன் கற்க வேண்டிய பாடம் ஒன்று இருக்கிறது. மாற்று மனிதனிடம் இருந்து உன்னை மதத்தால், ஜாதியால், நிறத்தால், இனத்தால், மொழியால் என்று எந்த வகையிலும் வேற்றுமை படுத்திக் கொள்ளாதே என்பது தான் அப்பாடம்.

Image Hosted by ImageShack.us

சுனாமியால் இலங்கையில் பாதிக்கப் பட்ட ஆமையும் நீர் யானையும் நண்பர்களாகி விட்டதாம். இரண்டும் ஒன்றை ஒன்று பிரிவதில்லையாம். அன்பு என்பது எல்லை இல்லாதது என்பதற்கு இதனை விட ஒரு சாட்சியுண்டா?

மனிதர்களில் பலர் சில சமயம் மிருகமாகி விடுகிறார்கள். மிருகங்களில் சில மனிதத் தன்மை பெற்று விடுகின்றன.

அன்பு செய்யுங்கள் உங்கள் மனதின் பிரிவினைகளை நீக்கி.

Friday, September 15, 2006

அன்பு

அன்பு இந்த வார்த்தையில் தான் எத்தனை மகத்துவமானது. அன்பில்லாமல் சமூகம் என்ற இந்தக் கட்டமைப்பு எப்படி உருவாகி இருக்கும்? தாயின் அன்பு முதல் முகம் தெரியாத பலரின் அன்பு வரை இந்த உலகில் அன்பை விட அருமையான ஒரு விஷயம் இருக்கிறதா?

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

வாடிய பயிறைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற மனநிலை கொள்ள இயலாவிட்டாலும் அது போன்ற மனநிலை கொள்வதே சரி என்றாவது எல்லோரும் உணர வேண்டும்.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

நமக்கு தீங்கு செய்பவரிடத்திலும் நாம் அன்பு செலுத்த வேண்டும். அவ்வாறு இயலாவிட்டாலும் நமக்கு தீங்கு செய்யாத எல்லோரிடத்திலுமாவது அன்பு செய்ய வேண்டும்.

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

அன்பையே மதம் என்று கொண்ட மனிதன் எல்லா மதங்களையும் சார்ந்தவனாகி விடுவான். எல்லா மதங்களும் அன்பையே போதிப்பதால் அன்பை மதம் என்று கொள்வது நீங்கள் எந்த மதத்தை சார்ந்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அந்த மதத்தை சார்ந்தவராகி விடுவீர்கள்.

அஹிம்சை

அஹிம்சை என்பது பிற உயிர்களைக் கொல்லாமை மட்டும் அல்ல. அது அற வழிப் போராட்டம்.

நான் மஹாத்மா அல்ல சாதாரண மனிதன் ஆகவே எனக்கு இந்த வழிகள்தான் தெரியும் என்று கூறி தவறுகள் புரிவது சரியல்ல. தெரிந்தே தவறுகள் செய்வது அதற்கு தகுந்த நியாயங்கள் சொல்வது எந்த விதத்திலும் சரி அல்ல.

அஹிம்சை மூலம் எல்லாப் பிரச்சனைகளுக்கும் உடனடித் தீர்வு ஏற்படாது. ஒரு பிரச்சனைக்கு அஹிம்சை வழியில் சென்று தீர்வு காண பல காலம் பிடிக்கலாம் ஆனால் அப்படி காணப் படும் தீர்வே சரியானதாக இருக்கும்.

ஒருவர் நம்மைத் திட்டுகிறார் என்றால் திரும்ப அதனை விட மோசமாக திட்டுவது எப்படி ஒரு பிரச்சனையைத் தீர்க்கும்? பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமெனில் அவர் திட்டுவது தவறு என்று உணரச் செய்ய வேண்டும். இதற்கு காலம் பல பிடிக்கலாம் ஆனால் இதுவே இந்தப் பிரச்சனை தீர வழி வகுக்கும். மாறி மாறி திட்டிக் கொள்வதால் என்ன பயன்?

இது போலவே பல பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும்.

அவர் ஹிம்சை புரிந்தார் நாமும் ஹிம்சை புரிவோம் என்று எடுத்துக் கொண்டால் அவர் ஹிம்சை புரிந்ததற்கும் அவரால் விளக்கம் கொடுக்க முடியும் என்றால் என்றுதான் ஓயும் ஹிம்சைகள்?

இதற்கு கீழே கொடுக்கப் பட்டுள்ளது வலையில் கண்ணில் அகப்பட்டது நன்றி மரத்தடி

சொல்லாலும் செயலாலும் மற்றவர்களைத் துன்புறுத்தாமல் இருப்பது. மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்துவது, மற்ற உயிர்களை மதித்தல், செடி கொடியாகட்டும், சக உயிர்களாகட்டும் எதற்கும் மதிப்பளிக்கவேண்டும்.

தன்னுயிர் போல பிற உயிர்களையும் கருதும் நோக்கு அது தான் அஹிம்சை.
உடலாலும் மனதாலும் பிறருக்கு தீங்கு வராமல் காப்பதும் அஹிம்சை தான். ஒருவன் நான் யாரையும் அடித்ததில்லை துன்புறுத்தியதில்லை எனலாம். ஆனால் அவன் பேச்சைக் கேட்டு சிலர் மனம் துன்புறுவார்களேயானால் அவன் அஹிம்சையில் இருந்து தவறியவன் ஆகிறான்.

இதற்கு கீழே கொடுக்கப் பட்டுள்ளது வலையில் கண்ணில் அகப்பட்டது நன்றி பானுக்குமார்

அஹிம்சை என்னும் சொல் , பல கருத்துக்களை உள்ளடக்கியுள்ள வார்த்தை. அதற்கு ஒரே வார்த்தையில் அர்த்தம் சொல்ல முடியாது. அன்புடைமை, தீங்கு செய்யாமை, கொல்லாமை முதலிய கருத்துக்களைக் கொண்டது அஹிம்சை என்னும் சொல். இந்தக் கருத்துக்களைத் திருக்குறள் சில அதிகாரங்களினால் விளக்குகிறது.

இன்னா செய்யாமை, அருளுடைமை, கொல்லாமை, புலால் மறுத்தல் முதலிய அதிகாரங்களின் கருத்துக்கள் சேர்ந்ததுதான் அஹிம்சை என்பதன் உண்மைப் பொருள்.

Wednesday, September 06, 2006

அறிமுகம்

நான் வலைப் பதிவுகளில் சில காலங்களாக உலவி வரும் ஒரு பதிவாளன். காந்தி போன்றவர்களால் நம் தேசம் நமக்கு 1947ம் ஆண்டு மீண்டும் கிடைத்தது. அன்னியர்களிடம் இருந்து தேசம் நமக்கு கிடைத்து விட்டது ஆனால் நாம்தான் இன்று தேசத்திற்கு அன்னியர்களாகி விட்டோம்.

அன்பு, அறன் என்ற இந்திய நாட்டின் இறையான்மை இன்று நமக்கு அன்னியமாகி விட்டது. அஹிம்சையில் உள்ள நம்பிக்கைகள் இன்று சுத்தமாக குறைந்து கொண்டே வருகிறது. அனைவருமே ஹிம்சை தான் அனைத்திற்கும் தீர்வு என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த என் முயற்சி அஹிம்சை ஹிம்சையை விட பல மடங்கு உறுதியானது என்ற என் நம்பிக்கைக்கு எனக்கு நானே வைத்துக் கொள்ளும் சத்திய சோதனை.